Articles

வெண்மணி தியாகபூமியில் தியாகிகளுக்கு வீரவணக்கம்…

0

வெண்மணி தியாகிகளுக்கு வீரவணக்கம்

கடந்த டிசம்பர் 25 அன்று கூலி உயர்வு கேட்டு உயிர் நீத்த 44 விவசாய தொழிலாளர்களுக்கு சிஐடியு விவசாய மற்றும் விவசாய தொழிலாளர் சங்கங்களின் தலைவர்கள், தொழிலாளரகள் விவசாயிகள் பொதுமக்கள் என ஆயிரகணக்கானோர்  கீழ் வெண்மணியில் அஞ்சலி செலுத்தினர்.

வர்க்கப் போராட்டத்தின் அடையாளமாகத் திகழும், கீழவெண்மணி தியாகிகளின் 55-ஆவது வீரவணக்க நாள் திங்களன்று மிகுந்த நெகிழ்ச்சியுடனும், உணர்ச்சிகரமாகவும் நடைபெற்றது.

அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டதற்காக வும், உயிரையே விட்டாலும், சாதிய பண்ணையடிமைத் தனத்திலிருந்து மீட்டு, தங்களுக்கு சுயமரியாதையான வாழ்வை ஏற்படுத்திக் கொடுத்த செங்கொடியை கீழே  இறக்க மாட்டோம் என்று உறுதியுடன் முழங்கி யதற்கா் 1968 டிசம்பர் 25 அன்று, நாகப்பட்டினம் மாவட்டம் கீழவெண்மணி கிராமத்தில் நிலப்பிரபுத்துவ பண்ணை யார்கள் 44 பேரை உயிரோடு எரித்துப் படுகொலை செய்தனர். 2 கர்ப்பிணிகள் உட்பட 20 பெண்கள், 19 குழந்தைகள், 5 ஆண்கள் என 44 பேர் சாம்பலாக்கப்பட்ட கொடூரம்  நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. எனினும், இந்த தியாகமே, இன்றுவரை நிலப்பிரபுத்துவ மற்றும் முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிரான போராட்டத்திற்கு, உழைக்கும் மக்களுக்கு உத்வேகத்தை அளிப்பதாக- வர்க்கப் போராட்டத்தின் அடையாளமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. சிபிஐஎம் மற்றும் சிஐடியு, விவசாய சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கம் வெண்மணித் தியாகிகள் நாளை ஒவ்வொரு ஆண்டும்  உணர்வுப்பூர்வமாக கடைப்பிடித்து வருகிறது. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் வர்க்க ஒற்றுமை நாளாகவும் கடைப்பிடித்து வருகின்றனர்.

வெண்மணி தியாகிகள் நினைவு இல்லத்தின் முன்பாக உள்ள கொடிமரத்தில் சிஐடியு கொடியை சிஐடியு மாநில தலைவர் தோழர் அ.சவுந்தர ராசன் ஏற்றி வைத்தார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ. சண்முகம், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் பி. செல்வசிங், சிஐடியு மாநிலப் பொதுச்செயலாளர் ஜி. சுகுமாரன், சிஐடியு மாநில நிர்வாகிகள் எம்.சந்திரன், எஸ்.கண்ணன், ஜயபால், கருப்பையா, கே.ரங்கராஜ் தேவமணி டி.டெய்சி மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் ஏ.லாசர், விதொச மாநில பொதுச்செயலாளர் வீ. அமிர்தலிங்கம்,  விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சாமி. நடராஜன், மூத்த தலைவர் என். சீனிவாசன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.வர்க்கப் போரில் உயிர்நீத்த 44 தியாகி களை நினைவுபடுத்தும் வகையில், சிஐடியு போக்குவரத்து சம்மேளனத்தின் சார்பில் 44 நெல் மூட்டைகள் வழங்கப்பட்டன.

  • தியாக வரலாறு…

‘தனக்கு அடிமையாக இருந்தவர்கள் தன்னை எதிர்ப்பதா?’ என்று ஆத்திரம் கொண்ட பண்ணையார் கோபாலகிருஷ்ணன் என்பவன், தனது அடியாட்களுடன் பெட்ரோல் கேன்கள், நாட்டுத் துப்பாக்கி சகிதம் வந்திறங்கினான். அவர்களுக்கு போலீசாரும் துணை நின்றனர். அவர்கள் முன்னிலையில் அந்த கொடிய சம்பவத்தை அரங்கேற்றினர். காட்டில் மிருகம் வேட்டையாடப்படுவது போல் கண்ணுக்கு கிடைப்பவர்கள் எல்லாம் சுடப்பட்டனர். இப்படி சுடப்பட்டவர்கள் கிட்டத்தட்ட 10 பேருக்கு மேல் இருப்பார்கள். இதனைக்கண்டு பயந்து நாலா மூலைக்கும் சிதறி ஓடி, வாய்க்கால் வரப்புகளில் ஒடி ஒளிந்துகொண்டனர் தொழிலாளர்கள். அனைத்து குடிசைகளும் எரிக்கப்பட்டன. நிராயுதபாணியாக நிற்கும் அப்பாவி பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் உயிரைக் காத்துக்கொள்ள தெரு மூலையில் உள்ள ராமையா என்பவரின் சிறிய கூரைவீட்டில் ஓடி ஒளிந்தனர். வெறிபிடித்து அலைந்தவர்கள் அந்த வீட்டை கண்டுபிடித்து வீட்டை வெளியே தாழிட்டு பெட்ரோலை ஊற்றி எரிக்கின்றனர். பூட்டிய வீட்டுக்குள் பெரும் அலறல் சத்தம் எழுந்தது. ‘ஐயோ, அம்மா ஆ…ஆ….எரியுதே!’ என்ற சத்தம் மட்டும் திரும்ப திரும்ப கேட்கிறது. தான் பிழைக்காவிட்டாலும் தன் குழந்தையாவது பிழைக்கட்டும் என்று ஒரு பெண் தன் குழந்தையை தூக்கி எறிகிறார். கொடூரர்கள் குழந்தை என்றும் பாராமல் வெட்டி வீழ்த்தி தீயில் எரித்தனர். வெளிய வர முயற்சித்தவர்களை மறுபடியும் உள்ளே தள்ளினர்.வெளியில் நின்று அழுத மூன்று பிஞ்சுக் குழந்தைகளையும் தீயின் உள்ளே தள்ளினர். தீயின் கோர நாக்குகளுக்கு சற்று நேரத்தில் 20 பெண்கள், 19 குழந்தைகள், 6 ஆண்கள் என 44 உயிர்கள் தீக்கிரையானது. ஒரு பெண் தனது மகளையும் சேர்த்து கெட்டியாக அணைத்துக் கொண்டு கருகியிருந்தார். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும்… கீழ்வெண்மணி தியாகிகள் போராடும் அனைவருக்கும் உரமாக இருப்பார்கள்.

  • தியாகிகளைப் போற்றுவோம்

*நிலப்பிரபுக்களால் ராமையாவின் குடிசைக்குள் வைத்து எரித்துக் கொள்ளப்பட்டவர்களின் (44) பெயரும் வயதும்.*

1.தாமோதரன் (1), 2.ஆசைத்தம்பி (10) ,3.ராஞ்சியம்மாள் (16), 4.பாப்பா (35),5.குணசேகரன் (1),6.ஜெயம் (10), 7.ஆண்டாள் (20),8.ரத்தினம் (35),9.செல்வி (3),10.ஜோதி (10) 11.கனகம்மாள் (25),12.கருப்பாயி (35),13. வாசுகி (3),14.நடராஜன் (10),15.மாதாம்பாள் (25), 16.முருகன் (40),17.ராணி (4) ,18.வேதவள்ளி (10),19.வீரம்மாள் (25),20.சீனிவாசன் (40),21. நடராஜன் (5), 22.கருணாநிதி (12),23.அஞ்சலை (45),24.தங்கையன் (5) ,25.சந்திரா (12),26.சின்னப்பிள்ளை (28),27.சுந்தரம் (45), 28.வாசுகி (5) ,29.சரோஜா (12),30.ஆச்சியம்மாள் (30),31.பட்டு (46), 32.ஜெயம் (6) ,33.சண்முகம் (13),34.குஞ்சம்பாள் (35), 35.கருப்பாயி (50), 36.நடராஜன் (6) ,37.குருசாமி (15),38.குப்பம்மாள் (35),39.காவேரி (50) 40.ராஜேந்திரன் (7) ,41.பூமயில் (16) ,42.பாக்கியம் (35),43.சுப்பன் (70), 44.சேது (26)

-வீரவணக்கம்-

CITU Tamilnadu

போக்குவரத்து சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் அளித்தனர்..

Previous article

கிக் ஊழியர்களை தொழிலாளர்களாக அங்கீகரிக்க புதிய சட்டமியற்றுக!

Next article

Comments

Comments are closed.