உழைப்பால் உயர்ந்த தோழர் உமாநாத்!
1921ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் நாள் கேரளத்தின் காசர்கோட்டில் இராம்நாத் ஷெனாய், நேத்ராவதி தம்பதியினருக்கு கடைசி மகனாகப் பிறந்த உமாநாத் தமது மாணவப் பருவத்தில் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பின்போது ,சுப்பிரமணிய சர்மாவின் அறிமுகக் கடிதத்துடன் பல்கலைக்கழகத்தில் இருந்த பொதுவுடைமைக் குழுவில் சேர்ந்தார்.
கட்சி கேட்டுக் கொண்டதன்படி கல்லூரிப் படிப்பைத் துறந்து, சென்னையில் உள்ள தலைமறைவு மையத்திலிருந்து மாநிலம் முழுவதும் ரகசியமாகத் தகவல்களைக் கொண்டு சேர்க்கும் கூரியர் பணியை ஏற்றுக் கொண்டு , முழுநேர ஊழியராகக் கட்சிப்பணியில் ஈடுபட்டார். 1940ல் சென்னை சதி வழக்கில் பி. ராமமூர்த்தியுடன் கைதுசெய்யப்பட்ட அவர் மூன்று ஆண்டுகளைச் சிறையில் கழித்தார்.அவருடைய அரசியல் வாழ்க்கையில் ஒட்டுமொத்தமாக ஒன்பதரை ஆண்டுகளைச் சிறையில் கழித்திருக்கும் அவர், 7 ஆண்டுகள் தலைமறைவாகவும் இருந்திருக்கிறார். இந்தியா விடுதலை பெற்ற பிறகு 1949ல் ரயில்வே தொழிலாளர் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தினார்.1951 ஆம் ஆண்டு கட்சியின் மீதிருந்த தடை நீக்கப்பட்டபோது திருச்சி சதி வழக்கில் தண்டனை பெற்றிருந்ததால் அவர் விடுவிக்கப்படவில்லை. 1954 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள்தான் அவர் விடுவிக்கப்பட்டார். நெருக்கடி நிலை காலகட்டத்திலும் பல அடக்குமுறைகளைச் சந்தித்துள்ளார்.
1987ல் சிஐடியு அகில இந்திய நிர்வாகியாக தேர்தெடுக்கப்படுகிறார்.
தமிழ் மாநில பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டு 1993ம் ஆண்டு வரை அப்பொறுப்பில் இருந்தார். ஒன்றுபட்ட கோவை மாவட்டத்தில் பஞ்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் சட்ட சலுகைகளையும், உரிமைகளையும் பெறுவதற்கு பி.ராமமூர்த்தி மற்றும் கே.ரமணி ஆகியோருடன் இணைந்து வெற்றிகரமான வேலை நிறுத்தங்களை நடத்தியவர் . டால்மியாபுரம் சிமெண்ட் ஆலைத் தொழிலாளர் போராட்டத்தின் போது உமாநாத் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டபோது அண்ணா அரசாங்கம் தலையிட்டு பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வந்தது.
1962ல் புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியில் நடந்த தேர்தலில் உமாநாத்தை பொதுவுடைமைக் கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.காங்கிரஸ் கட்சி சார்பில் பிரபல பஞ்சாலை முதலாளி நின்றார். 30,000 வாக்கு வித்தியாசத்தில் உமாநாத் வெற்றிபெற்றார். 1967ல் பிரபல தோல் ஆலை முதலாளி நாகப்ப செட்டியாரைக் காங்கிரஸ் நிறுத்தியது. இருப்பினும் மீண்டும் உமாநாத் வெற்றி பெற்றார்.
1952 ஆம் ஆண்டு அக்டோபர் 9 அன்று தோழர் பாப்பா உமாநாத்தை திராவிட இயக்கத் தலைவர் பெரியார் தலைமையில் சாதி மறுப்புத் திருமணம் செய்தார். இந்தத் தம்பதியினரின் இலட்சுமி, வாசுகி, நிர்மலா என்ற மூன்று மகள்களில் மருத்துவரான லட்சுமி ஏற்கனவே இறந்துவிட்டார். தோழர் பாப்பா உமாநாத் 2010ஆம் ஆண்டில் காலமானார். தோழர் உ.வாசுகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராகப் பணியாற்றிய வருகிறார்.
தோழர் உமாநாத் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் வரை உயர்ந்து கட்சிப் பணியாற்றியவர்.
உழைக்கும் வர்க்க நலனுக்காக ஓயாதுழைத்த தோழர் ஆர். உமாநாத் உடல் நலக் குறைவால் 2014-மே 21ல் திருச்சியில் காலமானார். அவரது மரணம் மருத்துவர்களால் உறுதிசெய்யப்பட்டவுடன், அவரது விருப்பத்தின்படி, அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன. திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மருத்துவர்கள் அவரது கண்களைப் பெற்றுச்சென்றனர். தோழர் உமாநாத்தின் தியாக வாழ்வு போற்றத் தக்கது. பின்பற்றத் தக்கது.
(டிசம்பர் 21: தோழர் ஆர். உமாநாத் பிறந்த நாள்)
——–
Uncategorized
Comments