காஞ்சிபுரம்:
தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) மோடி அரசு உள்பட உலகம் முழுவதும்பிற்போக்கான அரசுகளின் தொழிலாளர் விரோதநடவடிக்கைகளுக்கு துணைநிற்பது கண்டிக்கத்தக்கது என்று சிஐடியு அகில இந்திய துணைத்தலைவர் ஏ.கே.பத்மநாபன் கூறினார்.
காஞ்சிபுரத்தில் சிஐடியு 14வது தமிழ் மாநில மாநாட்டை வியாழனன்று (செப்.19) தொடங்கி வைத்து அவர் பேசியது வருமாறு :
காஞ்சிபுரத்தில் நடைபெறும் மாநாடு தோழர்கே.எஸ்.பார்த்தசாரதி நகரில் நடைபெறுகிறது. அவர் தனது 15 வயதில் போராட்டத்தை துவக்கினார். காஞ்சி மண்ணின் மறக்கமுடியாத தலைவராகத் தோழர் கேஎஸ்பி இருந்து வருகிறார் என்றால் அது அந்த தலைமுறைக்கும் இந்ததலைமுறைக்கும் உள்ள தொடர்பை குறிக்கிறது.சுதந்திரப் போராட்டத்திற்காகவும் சுதந்திர இந்தியாவைப் பாதுகாத்திடவும் இன்று நடக்கும் போராட்டத்திற்காகவும் ஆதர்ஷ தலைவராக இருந்து மக்களோடு நின்று மக்களுக்காகப் போராடிய மாபெரும் தலைவர் கேஎஸ்பி ஆவார். தோழர் கோ.வீரய்யன் ஒன்றுபட்ட தஞ்சைமண்ணின் மக்களின் போராட்ட உணர்வை உருவாக்கி பல போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றவர். தோழர் வி.வி.கிருஷ்ணமூர்த்தி, பட்டப்படிப்பு படித்து பணிக்குச் சென்றபோது பழிவாங்கப்பட்டவர். பழிவாங்கப்பட்டவர்களின் பிரதிநிதி அவர். அதேபோல் எல்.தியாகராஜன், பொதுத்துறையைப் பாதுகாக்க இந்துஸ்தான் போட்டோ பிலிம்சில் இருந்து கொண்டு அந்த தொழிற்சாலையைப் பாதுகாக்கவும், தொழிலாளர்களைப் பாதுகாக்கவும் பல போராட்டங்களை நடத்தியதலைவர். இத்தகைய தலைவர்களின் வாழ்க்கை, இன்றைய தலைமுறைக்கு உற்சாகம் தரக்கூடிய, உணர்வை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக உள்ளது. நம்முடைய தோழர்களுக்கு ஒவ்வொருதுறையிலும் ஒரு பாரம்பரியம் உள்ளது.
சென்னை தொழிலாளர் சங்கம்
சிஐடியுவின் 50வது ஆண்டு; ஏஐடியுசி உருவாகி 100 ஆண்டுகள் பூர்த்தியாகின்றது. 1918ஆம் ஆண்டு சென்னையில் முதல் தொழிற்சங்கமாக சென்னை தொழிலாளர்கள் சங்கம் உருவானது. அதனைத் தொடர்ந்து 1920ல் ஏஐடியுசி தொழிற்சங்கம் துவங்கப்பட்டது. இந்தியதொழிற்சங்க வரலாற்றில் இரட்டைக் குழல் துப்பாக்கியாக தொழிற்சங்க இயக்கங்கள் செயல்பட்டன.ஒருபுறம் ஏகாதியபத்தியத்திற்கு எதிராகவும், மறுபுறம் முதலாளிகளுக்கு எதிராகவும் நமது முன்னோர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாகத்தான் முழு விடுதலை என்ற முழக்கம் தொழிற்சங்க மேடையிலிருந்து அப்போதுஎழுந்தது. நூறு ஆண்டு போராட்ட பாரம்பரியத்தை கொண்டவர்கள் நாம்.
ஒன்றுபட்டு நிற்போம்
தொழிற்சங்கங்கள் ஒன்றாக இல்லை என்பது பலவீனம்தான். பிரச்சனை வரும்போதும், எதிரிகளைச் சந்திக்கும் போதும் ஒன்றுபட்டு நிற்கமுடியும். கொடிகளின் வண்ணங்களில் வேற்றுமைப் பட்டாலும் எண்ணங்களில் ஒன்றுபட்டிருக்கின்றோம். 1980களில் ஒன்றுபட்ட பிரச்சாரக் குழு உருவாக்கப்பட்டபோதும் 1990 வரை தொழிற்சங்கங்களை ஒன்று சேர்க்க முடியவில்லை. 2009ல் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பை உருவாக்கி அத்துணை சங்கங்களையும் ஒன்று சேர்த்து 2019 வரை தொடர்ச்சியான வேலை நிறுத்தப் போராட்டங்களை நடத்தி வருகிறோம். சட்டத் திருத்தம், பொதுத்துறை தனியார்மயம், உரிமைகள் பறிப்பு என பல்வேறுவகையில் தொழிலாளர்கள் பழிவாங்கப்படு கின்றனர். இனி இஎஸ்ஐ, வருங்கால வைப்புநிதி இல்லை என்று ஆட்சியாளர்கள் கூறுகிறார்கள். தனி வாரியம் அமைத்து தலைமைச் செயல் அதிகாரியிடம் அனைத்தையும் ஒப்படைக்கப்போகிறார்களாம். 10 லட்சம் கோடி ரூபாய் பணத்தை அவர்களிடம் கொடுத்து செலவு செய்யச்சொல்கின்றனர். தொழிலாளர் நலத்துறை அமைச்சரின் கீழ் இயங்கிய ஒரு நிறுவனத்தை தனிநபரிடம் ஒப்படைக்க அரசு முயற்சிக்கிறது.
2014 ஆம் ஆண்டு முதல் நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் அப்போதைய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்தபோது தொழிலாளர்களை அடிமையாக்கும் இஎஸ்ஐ, பிராவிடன்ட் பன்ட் சட்டம் என்றார். இதை ஏன் கட்டாயமாக்க வேண்டும் என்று கேள்வி கேட்டார். இவை இரண்டும் வேண்டாம் என்பதுதான் ஆடசியாளர்களின் நிலை. தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து வந்துள்ளன. அவர்களிடம் பாலிசிஎடுத்து அதன் மூலம் தேவையானதைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று தொழிலாளர்களை அவர்களிடம் ஆட்சியாளர்கள் தள்ளிவிடுகின்றனர்.
பிற்போக்குப் பாதையில் ஐஎல்ஓ
சட்டத்திருத்தங்கள் அனைத்தும் ஏற்கனவே போராடிப் பெற்ற உரிமைகளை பறித்துவிட்டது. கூட்டுப்பேர உரிமையை சீர்குலைக்கப்பட்டது. இந்தாண்டு தொழிற்சங்க இயக்கத்திற்கு மட்டுமல்ல, சர்வதேச தொழிலாளர் அமைப்பான ஐஎல்ஓவிற்கும் 100வது ஆண்டாகும். உலக தொழிலாளர்களின் நலனை காக்கவும் பொதுவான கோட்பாடுகளை உருவாக்கவும் ஐஎல்ஓ செயல்பட்டு வந்தது. தற்போது ஐஎல்ஓ, இந்தியா போன்ற பிற்போக்குத்தனமான அரசுகளுக்கு துணை நிற்கும் அமைப்பாக மாறிவிட்டது. ஐஎல்ஓவின் சட்டங்கள் உலகம் முழுவதும் மீறப்படுகின்றது. இதுதான் உலகம் முழுவதும் தொழிலாளர்கள் போராடுவதற்கான காரணங்களாக உள்ளது. எனவே மீண்டும் மீண்டும் மக்களிடம் செல்வோம், மக்களிடம் எடுத்துரைக்கும் பணியைச் செய்வோம். மக்கள் விரோத அரசு குறித்தும் அவர்களின் அரசியல் குறித்து எடுத்துரைப்போம்.போராடும் தொழிலாளர் வெற்றி பெறுவார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு பிஎஸஎன்எல் தொழிலாளர்கள்தான். 7வது முறையாக தொழிற்சங்க தேர்தலில் பிஎஸ்என்எல்இயு வெற்றி பெற்றுள்ளது. தொழிலாளர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் நமது செயல்பாடு இருக்கவேண்டும். வரும் செப்டம்பர் 30 போராட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒற்றுமையாகச் செயல்பட்டு அனைத்துத் துறையினரையும் ஒருங்கிணைத்து மத்திய – மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் முதலாளிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம். அதற்கு திட்டமிடும் வகையில் இந்த மாநாடு அமைய வேண்டும்.இவ்வாறு ஏ.கே.பத்மநாபன் பேசினார்.
Comments